2010ம் ஆண்டளவில் உலக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் வரைபடத்தில் இலங்கையும் உள்வாங்கப்படும் என பெற்றோலிய, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்றுமாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் எமது நாட்டுக்கு பெருமளவு நன்மைகளும், பொருளாதார முன்னேற்றத்துக்கு உந்து சக்தியையும் கொடுக்கும். அடுத்த ஆறு மாத காலத்துக்குள் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு அகழ்வாராய்ச்சிப் பணிகளை கேர்ன் இந்திய நிறுவனம் ஆரம்பிக்கும் 2010ம் ஆண்டளவில் முதலாவது எண்ணெய் பரல் இலங்கைக்கு கிடைத்துவிடும். நாளொன்றுக்கு 80ஆயிரம் பரல் எண்ணெய் உற்பத்தி செய்ய முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் பெருமளவு அந்நிய செலாவணியை மிச்சப்படுத்த முடியுமென்றும் பௌசி குறிப்பிட்டுள்ளார்.
