இந்தியா இலங்கைக்கு இடையிலான எண்ணெய் அகழ்வு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து

மன்னார் கடற்படுகையில் எண்ணெய் அகழ்வின் பொருட்டு இலங்கை அரசும் இந்தியாவின் கேர்ன் நிறுவனமும் நேற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. அலரிமாளிகையில் நேற்றுமுற்பகல் 11மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வின்போது இலங்கை சார்பில் பெற்றோலியவள அமைச்சர் அமைச்சர் பௌசியும், இந்தியா சார்பில் கேர்ன் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் இந்திரஜித் பானர்ஜியும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். மன்னார் கடற்படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவை அகழ்வாய்வு செய்வதற்கான அனுமதி இந்திய கேர்ன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இவ்வாறானதொரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்கீழ் மன்னார் கடற்படுகையில் 300சதுர கிலோமீற்றர் பரப்பளவும் 200மீற்றரிலிருந்து 1800மீட்டர்வரை அகலமும் கொண்ட எஸ்.எல் 2007-01-001 என்ற வலயம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மன்னார் கடற்படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு அகழ்வாராய்ச்சியின் பொருட்டு எதிர்வரும் மூன்று வருட காலத்திற்குள் 112மில்லியன் அமெரிக்க டொலர்களை கேர்ன் நிறுவனம் செலவிடவுள்ளது. எட்டு வருடங்களுக்கு அகழ்வாராய்ச்சிக்கென இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.