உழைக்கும் வர்க்கத்தினரின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூலமாக தீர்வு பெற்றுக் கொள்ள முடியுமென்றும் 10ம்திகதி மேற்கொள்ளப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் நியாயமற்றது எனவும் தொழிற்சங்கத் தலைவர்கள் பலர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். உழைக்கும் வர்க்கத்தினரின் நலனை பெற்றுக் கொடுப்பது என்ற பெயரில் இப்போராட்டத்தின் மூலம் அரசியல் இலாபம் பெறுவதில் சில சக்திகள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பிபல தொழிற்சங்க தலைவர்களான லெஸ்லி தேவேந்திர, டபிள்யூ எச் பியதாச, சோமவீர சந்திரசிறி ஆகியோரே இவ்வாறு தெரிவித்துள்ளனர். இலங்கை சுந்திர ஊழியர் சங்கம் உட்பட நாட்டின் பிரதான தொழில் சங்கங்கள் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாடொன்று நேற்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்போதே மேற்படி தொழிற்சங்கத் தலைவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியுடன் தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பலனாக அரச ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபா கொடுப்பனவொன்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கென பதினான்கரை பில்லியன் ரூபாவினை அரசாங்கம் ஒதுக்க நேர்ந்துள்ளது. உடனடியாக ஐயாயிரம் ரூபாவை அதிகரிக்க வேண்டுமானால் அதற்கென 72 பில்லியன் ரூபா தேவைப்படுமென திறைசேரியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர தெரிவித்துள்ளார். யுத்தம், அபிவிருத்தி மற்றும் எரிபொருள் விலையேற்றத்திற்கு மத்தியில் இது சாத்தியமில்லை. இதனைக் கருத்திற் கொண்டே பத்தாம் திகதி இடம்பெறும் போராட்டத்தில் நாம் கலந்து கொள்ளப்போவதில்லை என தீர்மானித்தோம். அத்துடன் அரசியல் இலாபம் கருதி சில சக்திகளால் மேற்கொள்ளப்படும். இப்போராட்டத்தைக் கண்டித்து நாளை 9ம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக எமது தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
