வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றவேளை அங்கு விபத்தில் சிக்கி மரணமான ஒன்பது பேரின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டது. வெளிநாட்டு அமைச்சு கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் நட்டஈடாக கிடைத்த பதின்மூன்றரை மில்லியன் ரூபாவை அமைச்சர் ரோகித்த போகொல்லாகம பகிர்ந்தளித்தார். டோகா கட்டாரில் இறந்த ஐவர், ஜித்தாவில் மரணமான இருவர் மற்றும் துபாயில் மரணமான இருவர் ஆகியோரின் நெருங்கிய உறவினர்களிடம் நட்டஈட்டுத் தொகையை அமைச்சர் வழங்கினார். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சத்து நாற்பத்தி மூவாயிரத்து எழுநூறு ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டதுடன் இவ்வாறு நட்டஈடு பெற்றோர் மத்தியில் தலா நாற்பத்து மூன்றரை இலட்சம் ரூபா பெற்ற இருவரும் உள்ளனர். வெளிநாட்டில் விபத்தில் சிக்கி இறப்போரின் சார்பாக நட்டஈடு பெறும் விடயத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சர் உசைன் பைலாவின் தலைமையில் வெளிநாட்டு தூதரகங்கள் மட்டுமன்றி கொன்சியுலர் பிரிவும் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக அமைச்சர் போகொல்லாகம குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கிடைக்கப்பெற்ற இந்த பணத்தை இறந்தோரின் உறவினர்கள் சிறந்த முறையில் முதலீடு செ;யது பயனடைய வேண்டுமென அமைச்சர் போகொல்லாகம கேட்டுக்கொண்டார்.
